விமர்சனம்...

நில் கவனி செல்லாதே…. 


நில், கவனி, செல்லாதே இத்திரைப்படத்தினை நான் நேற்று திங்கட்கிழமை, மே, 24, 2011 அன்று பார்த்தேன். ஆரம்பக் கட்டத்திலேயே படம் விறுவிறுப்புடன் சென்றது , ஹாலிவுட் திரைப்படத்தினைப் பார்த்ததன் ஒளிப்பதிவு, ஆரம்பத்தில் ஒரு வானில் பெண் ஒருவரின் சத்தம் கேட்கின்றது அவ்வான் தெள்ளூர் என்ற இடத்தினைத் தாண்டியவுடன் துப்பாக்கிச் சத்தம் கேட்கின்றது பின்னர் கதை இளவயதுப் பசங்களுடன் தொடங்குகின்றது. இள வயதுமிக்க காலேஜ் பசங்க ரொம்பத் துள்ளிக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் சுற்றுலாச் செல்ல ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்திருந்த தெள்ளூர் என்ற மர்ம இடத்திற்குச் செல்கின்றனர். அங்கு சன நடமாட்டம் குறைந்தே காணப் பட்டது அவ்விடத்தில் இருந்த வீடுகள் பாழடைந்து உடைந்திருந்தன. ஆரம்பத்தில் ஒரு சிறுவனைச் சந்திக்கும் இளைஞர்கள் பின்னர் ஒரு நொண்டியானவரினையும் சந்திக்கின்றனர், நொண்டி ஆரம்பத்தில் நல்லவர் போல நடித்துப் பின்னர் இளைஞோர் பலரின் கொலைக்குக் காரணமாகின்றார், நொண்டியின் மகன் தான் கொடூரவராக மாறிப் புதிதாக வருபவர்களினை கொலை செய்யவும் செய்கின்றார், சிறு வயதில் நொண்டியின் மகன் மற்றும் அவர் குடும்பத்திற்கு ஏற்பட்ட பாதிப்பே இவ்வாறு தெள்ளூரிற்குப் புதிதாக வருபவர்களினைக் கொலை செய்து விடுகின்றனர் நொண்டியும் அவர் மகன் மற்றும் காட்டிலாக அதிகாரி, மற்றும் இரண்டு பெண்களும். இவர்களை விட்டு எவ்வாறு இளஞர்கள் தப்பித்துச் செல்கின்றனர் என்பது கதையின் முடிவு, இத்திரைப்படம் அவ்வளவு பெரிதாக என்னைப் பாதிக்கவில்லை இருப்பினும் இத்திரைப்படக் கதாநாயகியாக நடித்த தன்சிகா என்னை இத்திரைப்படத்தினை விட்டு எழுந்திருக்காமல் வைத்திருந்தார். அவரின் முகமே என்னை இவ்விமர்சனத்தினை எழுதும் அளவிற்கு என்னைத் தூண்டியது. இத்திரைப்படத்தின் கதைக்கரு பெரும்பாலும் ஆந்திர மக்களின் தமிழக எதிர்ப்பினைப் பிரதிபலித்துக் காட்டுவதும் முக்கிய அம்சம். இத்திரைப் படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களின் வரிசையில் இல்லாதிருந்தாலும் ஒருமுறை வீட்டில் டி. வி. டிப் பிரதி எடுத்துப் பார்க்கலாம்…..


ஆயிரத்தில் ஒருவன்..

பெயருக்கு ஏற்றாற்போலே தமிழ்த் திரைப்படங்களில் வந்த வித்தியாசமான திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒரு திரைப்படமாக விளங்குகின்றது. இத்திரைப்படத்தினை நான் சன் தொலைக்காட்சியில் கனடாவிலிருந்து பார்த்தேன். சன் டி வின் 18 ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன , அதேவேளை இத்திரைப்படம் சிறப்புத் திரைப்படமாக காண்பிக்கப் பட்டது, நானும் ஆவலுடன் பார்த்தேன், ஏனைய தமிழ்த் திரைப்படங்களைங்களினைக் காட்டிலும் மிகவும் விறு விறுப்புடன் ஓடியது இத்திரைப்படம். நான் ஹாலிவுட் திரைப்படத்தினைப் பார்ப்பது போன்று தொடர்ந்து இதனைப் பார்த்தேன் என்பதே உண்மை. அதிலும் சோழர்களின் நகரத்தினை ரீமாசென், கார்த்திக் ஆகியோர் அடைந்தபோது திரைப்படத்தின் கதை மென்மேலும் விறுவிறுப்படைந்தது. திரைப்படத்தில் வரும் பாடல்கள் நன்றாக இருந்தாலும் படத்திற்கேற்றாற்போல வழமைபோல வரும் தமிழ்த் திரைப்படங்கள் போலே ம்சாலாத்தனமாகவிருந்தது. நானும் வெகு ஆவலுடன் இத்திரைப்படத்தினைப் பார்த்தபொழுது ஒரு முக்கியவிடயம் எனக்குப் புலப்பட்டது அதாவது, இத்திரைப்படமும் இலங்கை இனப்பிரச்சனையின் சம்பவங்களும் ஒன்றோடொன்று இணைந்து கானப்பட்டதே ஆகும். அதாவது வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தினைப் பறை சாற்றும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது, சோழ மன்னராக வரும் பார்த்திபன் இறுதியில் சந்திரிக்கா போன்ற பாண்டிய இளவரசியின் வம்சத்தினைச் சேர்ந்தவராக ரீமா சென்னும் இருப்பது காணக்கூடியதாகத் திகழ்கின்றது, ஆனாலும் இவை உண்மை என்று சத்தியம் பண்ணிக் கூறமுடியாது. திரைப்படத்தில் பார்த்திபன் சோழ அரசனாகவே காட்சி தருகின்றார், அவரின் மகனாக நடித்த பெடியன் பார்த்திபன் இறந்தபின்பு தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள எத்தனிப்பது தமிழ்த் திரைப்படங்களில் சற்று வித்தியாசம். ஆரம்பம் முதல் இறுதி வரை சோழ இராஜாவினைக் கொலை செய்ய வரும் பாண்டிய வம்சாவளியினைச் சேர்ந்த ரீமா சென்னின் நடிப்பும் சற்று வித்தியாசம். இதன் பிரமாண்ட சிகையலங்காரங்களும் மேடை அமைப்புகளிற்காக ஒருமுறை தியேட்டரில் சென்று பார்க்கலாம்.



பிளேடைம் (Playtime) 


நான் வழமை போலத் திரைப்படங்களினை இயக்குனரின் பெயரினை வைத்தும், நல்ல பாடல்களினையும் வைத்துப் பார்த்தும் அமெரிக்க ஹாலிவூட் தரத்திலிருக்கும் படங்களினைத் தனியே பிரித்துப் பார்த்தும் பார்ப்பதுண்டு. அதாவது இந்தியத் திரைப்படங்களின் பெரிதும் மணிரத்தினம் போன்றவரின் திரைப்படங்களினையும், ஹாலிவூட்டில் ஸ்டீவன் ஸ்பீல்பேர்க் போன்றவர்களின் பிரமிப்பூட்டும் திரைப்படங்களினையும் விரும்பிப் பார்ப்பதுண்டு, ஆனாலும் இத்தகு திரைப்படங்களிலும் என்னால் திரைப்பட உலகினிற்குள் செல்ல முடிவதில்லை, இருப்பினும் நான் இந்தியாவில் திருச்சிராப்பள்ளியில் அம்மம்மாவுடன் தங்கியிருந்த காலப் பகுதியில் பிரெஞ்சு மொழித் திரைப்படத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றினில் 'பிளேடைம்' என்ற திரைப்படத்தினைப் பார்த்தேன். இது என்னை வெகுவாகக் கவர்ந்து திரைப்படத்தின் உள்ளே இழுத்த சில திரைப்படங்களுள் ஒன்றாகும். இத்திரைப்படத்தில் ஒலியலைகள் இருக்கவில்லை அதன் காட்சியமைப்புக்களும், அதன் வினோத அலங்காரங்களும் என்னை மிகவும் கவர்ந்திழுத்தன என்று கூறலாம். இதன் கதைக்கருவானது ஒரு நகைச்சுவை மனோபாவம் உடைய ஒருவர் தனது பயணங்களினை எவ்வாறு நாம் வண்ண ஓவியம் போல எதிர்நோக்குகின்றோம் என்பது இத்திரைப்படத்தின் முக்கிய அம்சம். அமைதியான ஒரு புதுயுக ஓவியத்தினூடே நுழைந்து சென்று பின் தெளிவடைகின்றோம், நான் இத்திரைப்படத்தினை இந்தியாவில் அம்மம்மாவுடன் தங்கியிருந்த காலத்தில் நிலத்தில் கட்டிலைப் போட்டு  படுத்துக்கொண்டு நான் இத்திரைப்படத்தினைப் பார்த்தவேளை எனது மனம் பெரிதும் உற்சாகத்துடன் வெகுவான ஆனந்தத்துடன் இருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இதன் காட்சியமைப்புக்களை எளிதில் சொல்லியோ எழுதியோ விபரிக்கமுடியாது, இருப்பினும் அத்திரைப்படம் எனது கண்களுக்குள் இன்றும் ஓடிக்கொண்டிருப்பதே முக்கிய சாட்சியாகும் அது எவ்வளவு சிறந்த திரைப்படமென்று. இத்திரைப்படத்தினை தொடர்ந்து எவ்வளவு தடவைகள் என்றாலும் பார்க்கலாம் இத்தகு காரனத்தினால் நான் எனது உலகின் சிறந்த திரைப்பட வரிசையில் இத்திரைப்படத்தினையும் தெரிவு செய்கின்றேன். 






மைனா...

      
  படத்தினை நான் வியாழக்கிழமை, ஜூன் 30, 2011 அன்று மாலை நேரமும் பின்னர் இரவும் பார்த்தேன். இத்திரைப்படத்தின் ஆரம்பத்தில் தான் சிறுவயது முதல் பாசம் வைத்திருந்த மைனா என்ற பெண்ணின் மீது அளவு கடந்த காதல் கொண்டிருக்கின்றார் ஒரு இளவயதுப் பெடியன். இவர் கிராமத்து சூழலில் வளர்ந்த படிப்பறிவில்லாத கோபம்கொண்ட வாலிபராகவும் இருக்கின்றார். இவரது இக்காதலினை இவரது தகப்பனார், மற்றும் இவர்தம் மாமியார் வெறுத்து மைனாவினை வேறொருவரிற்குக் கல்யாணம் பேசி வைக்க, கோபம் கொண்டு மாமியாரை எட்டி உதைக்கும் காட்சியில் கிராமத்துச் சாயல், கிட்டத்தட்ட நிஜ வாழ்க்கையினை எமக்கு பிரதிபலித்தது மைனா திரைப்படம். ஆரம்பம் முதல் மைனா திரைப்படத்தினை நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததன் காரணம் மைனா திரைப்படக் கதாநாயகி கிட்டத்தட்ட ஜாக்ஸனின் அக்கா போன்ற தோற்றத்தினைக் கொண்ட காரணமே, மிகவும் அழகிய முகவடிவத்தினைக் கொண்டிருந்த இத்திரைப்படக் கதாநாயகி நடிப்பில் அமைதி. மௌனத்தில் இரசிகர்களைக் கட்டி இழுக்கின்றார். இவ்வாறு அவர் கவர்ந்திழுத்த இரசிகர்களுள் நானும் ஒருவனானேன். ஆரம்பத்தில் பருத்திவீரன் போன்று தோற்றம் கொண்ட கதை பின்னர் காதல் திரைப்படத்தின் சாயலினைப் பற்றியிருந்தது நம் மனதினில் பதிந்திருக்கக் காரணமான மிகப்பெரும் யுக்தி. மைனாவின் காதலனைக் கைது பண்ணிச் சென்ற காவல்துறை அதிகாரியினைப் பார்த்த அடுத்த நிமிடமே அதிர்ந்துவிட்டேன், காரணம் நான் குளோபல் வூட்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்த சமயம் என்னுடன் வேலை செய்த குபேந்தரின்  அச்சு அசலாக இருந்திருந்தார் அந்நடிகர், இறுதியில் அவரே திரைக்கதைக்கு முடிவும் கட்டுகின்றார். கதைக்குச் சம்பந்தமில்லாதவர்கள் இறுதியில் திரைக்கதையின் முட்டுக்கட்டையாக விடப்பட்டிருப்பது தமிழ்த் திரைப்படங்களில் புதுமை. 'மைனா மைனா' என்ற ஆரம்ப கட்டத்தில் வரும் பாடலும் அதன் பின்னணியில் அமைந்து வரும் திரைப்படப் பின்னிசையும் மனதிற்குக் குளிர்ச்சியினைத் தந்தன. மைனா இறுதியில் சோகத்தினை அள்ளிக்கொடுத்தாலும் ஒரு சிறு கிராமத்துக் காவியமாகத் திகழ்கின்றது. 




பதிலளியுங்களேன் !